Monday, March 3, 2008

வாழும்போதே வாழ்த்துவோம்


செத்த பிறகு மட்டுமே சிங்காரிக்கத் தெரிந்தவர்கள் தமிழர்கள் என்ற நிலை இனியாவது மாற வேண்டும்; கலைஞர்களை வாழும்போதே வாழ்த்துவோம் என்று சுஜாதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து ஆதங்கத்துடன் பேசினார்.

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னை - நாரதகான சபாவில் நடந்தது.

பல்வேறு கலைஞர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், 'சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் எந்த எழுத்தாளரும், வாசகனும் இனி எழுத முடியாது' என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி புகழ்ந்து பேசினார். 'மருதநாயகம்' படத்தில் தனது பெயரை போட வேண்டாம் என்று சுஜாதா கூறியதை நினைவுகூர்ந்த நடிகர் கமலஹாசன், சுஜாதாவுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவங்களை விவரித்தார்.

சுஜாதாவை நாடக உலகு பயன்படுத்திக் கொண்ட அளவு, சினிமா உலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் நடிகர் சிவகுமார்.

கவிஞர் வைரமுத்துவோ, 'இன்று அஞ்சலி செலுத்த வந்திருக்கும் கூட்டம், சுஜாதா உயிரோடு இருக்கும்போது வந்திருந்தால், அவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்.செத்த பிறகு மட்டுமே சிங்காரிக்கத் தெரிந்தவர்கள் தமிழர்கள் என்ற நிலை இன்றிலிருந்தாவது மாற வேண்டும்' என்றார்.

'உயிர்மை' இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்ரன் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், நடிகர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், பார்த்திபன், சிவகுமார், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் வசந்த், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், ரா.கி. ரங்கராஜன், இந்திரா பார்த்தசாரதி, சாருநிவேதிதா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

(மூலம் - வெப்துனியா)


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: