Friday, March 7, 2008

ஒரே மேடையில் கருணாநிதி, ராமதாஸ், ரஜினி


இயக்குநர் தங்கர்பச்சானின் முயற்சியால் முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.நல்ல படங்களைக் கொடுப்பது மட்டுமல்லாமல், நல்ல விஷயங்களையும் செய்து அவ்வப்போது அசத்துபவர் தங்கர். அவரது கடுமையான முயற்சியால் ஒரு மிகப் பெரிய செயல் நடக்கப் போகிறது.அது, ஒரே மேடையில், கருணாநிதியும், ராமதாஸும், ரஜினிகாந்த்தும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.கருணாநிதிக்கும், ரஜினிக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், ராமதாஸ்- ரஜினி மோதலை தமிழகம் மறந்திருக்காது. பாபா படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் புகுந்து பாமகவினர் செய்த ரகளை, அதனால் ஏற்பட்ட ரஜினி ரசிகர்களின் கொந்தளிப்புகள் என தமிழகமே அப்போது அல்லோகல்லப்பட்டது.ஆனால் காலப் போக்கில் இந்த மோதல் போக்கு நீர்த்துப் போனது. ரஜினிகாந்த் திரைப்படங்களில் புகை பிடிப்பதை விட வேண்டும் என்று ராமதாஸும், அவரது மகன் மத்திய அமைச்சர் அன்புமணியும் கோரிக்கை விட அதை ஏற்றார் ரஜினி. சந்திரமுகி, சிவாஜி ஆகிய இரு படங்களிலும் அவர் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறவில்லை.இந் நிலையில் இரு துருவங்களும் ஒரு மேடையில் சந்திக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதும் கூட இதுவே முதல் முறையாகும்.தங்கர் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் 100வது நாள் விழாவில் தான் இந்த அதிசயம் நடக்கப் போகிறது.நூறாவது நாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாட நினைத்தார் தங்கர். உடனடியாக கருணாநிதி வீட்டுக்கும், ரஜினி வீட்டுக்கும் ஓடினார். இருவரையும் விழாவுக்கு வருமாறு அழைத்தார். கூடவே, ராமதாஸையும் அழைக்கவுள்ளேன் என்றும் அவர்களிடம் சொல்லி வைத்தார். அதற்கு இருவருமே ஆட்சேபிக்கவில்லையாம்.இதையடுத்து தைலாபுரம் தோட்டம் சென்று ராமதாஸை சந்தித்து, விஷயத்தைச் சொல்லி அவரது ஒப்புதலையும் பெற்றார்.விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், நடைபெறும் இடம், தினம், நேரம் ஆகியவை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தங்கர் தெரிவித்துள்ளார்.திமுக-பாமக மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் இவர்களை ஒரே மேடைக்குக் கொண்டு வர ஓடியாடிக் கொண்டிருக்கிறார் தங்கர்.


Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: