Friday, March 7, 2008

தசாவதாரம் 'புக்கிங்' ஆரம்பம்

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தின் விற்பனையும், புக்கிங்கும் தொடங்கி விட்டது. கேரள விநியோக உரிமை ரூ. 2.25 கோடிக்கு விற்றுள்ளதாம்.தசாவதாரம் படத்தின் முதல் விநியோக விற்பனை இதுதான். கேரளாவில் வேறு ஒருவருக்கு படத்தை விற்றுள்ள தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், தமிழ்நாடு மற்றும் சில வெளிநாடுகளில் சொந்தமாகவே திரையிடத் திட்டமிட்டுள்ளார்.ஏப்ரல் 18ம் தேதி படம் திரைக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.கேரள உரிமையை என்.ஆர்.ஐ ஒருவர் எடுத்துள்ளார். கேரளாவில் லால் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திரையிடுகிறார். இந்தலால் வேறு யாருமல்ல, தமிழில் சண்டக்கோழி, ஓரம்போ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ள நடிகர் லால்தான். கேரளாவில் இவரும் இயக்குநர் சித்திக்கும் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர்.இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் வெளியிடப்படாத வகையில் அதிக அளவிலான தியேட்டர்களில் கேரளாவில் தசாவதாரம் திரையிடப்படவுள்ளது.மேலும் படத்தைப் பெற விநியோகஸ்தர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதாம். மலையாளப் புத்தாண்டு விஷு அன்று தசாவதாரம் அங்கு ரிலீஸாகிறது. மோகன்லால், மம்முட்டி, திலீப் ஆகியோரது படங்களும் அந்த சமயத்தில் வெளியாவதால் திரை ரசிகர்களுக்கு பெரும் விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.இதற்கிடையே, ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் பிரமாண்டமான அளவில் ஆடியோ ரிலீஸ் நடக்கவுள்ளது. நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த விழாவுக்காக ரூ. 80 லட்சம் செலவில் பிரமாண்ட செலவுகளைச் செய்து வருகிறாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஜாக்கி சான் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: