Thursday, March 6, 2008

தேவாரம் பிரச்சனைக்கு தீட்சிதர்கள் முற்றுப் புள்ளி



சிதம்பரம் நடராஜர் கோவில் திரு‌ச்சிற்றம்பல மேடையில் திருவாசகம் பாட வந்த சிவனடியார்களுக்கு கோவில் தீட்சிதர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து பாட வைத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று முன்தினம் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உத்தரவின் படி தமிழில் தேவாரம், திருவாசகம் பாடச்சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தடுத்ததா‌ல் மோதல் உருவானது.

இ‌தி‌ல் 11 தீட்சிதர்கள், சிவனடியார் ஆறுமுகசாமி, அவரது ஆதரவாளர்கள் உ‌ள்பட 45 பேர் கைது செய்யப்பட்டு ‌சிறை‌யில் அடைக்கப்பட்டனர்.இ‌ந்‌நிலை‌யி‌ல், சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடப்படுவதை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு நேற்று கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இப்பிரச்சனையில் சிவனடியார்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் , பாமக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் கலை இலக்கியக் கழகம், மனித உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் களமிறங்கின.

இதனால் சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் காணப்பட்டு வந்தது.இதனால் நடராஜர் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்நிலையில் இன்று காலை 10.15 மணியளவில் சிவனடியார்கள் குழுவுடன், மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த போராட்டக் குழுவினர் சுமார் 100 பேர் தேவாரம், திருவாசகம் பாடுவதற்காக நடராஜர் கோவிலுக்குச் செல்ல முற்பட்டனர்.

அப்போது தீட்சிதர்கள் 11 மணி வரை கால பூஜை நடைபெறும் என்பதால், அந்த பூஜை முடிந்த பிறகு தேவராம் பாடலாம் என்றும், அதுவரை பொறுத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.அதனை சிவனடியார்களும் ஏற்றுகொண்டனர்.

இதனையடுத்து 11.15 மணியளவில் 30 பேர் கொண்ட சிவனடியார்கள் குழு ஒன்று உள்ளே சென்றது.அவர்களை தீட்சிதர்கள் மிகுந்த மரியாதையுடன் அழைத்துச்சென்றனர். இதனையடுத்து சிவனடியார்கள் 5 பேர், கட்டணம் ஏதும் செலுத்தாமல் திருச்சிற்றம்பல மேடையேறி தேவராம் மற்றும் திருவாசகத்தை பக்திப் பிரவாகத்துடன் பாடி வணங்கினர்.அவர்களுடன் சேர்ர்ந்து சிதம்பரம் கூடுதல் போலீஸ் எஸ்.பி. செந்தில் வேலனும் சீருடையை கழற்றி விட்டு தேவாரம் பாடினார்.

தேவாரம் பாடிவிட்டு வந்த சிவனடியார்கள் 5 பேருக்கும் தீட்சிதர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர்.அரசு எச்சரிக்கையை தொடர்ந்து தேவாரம் பாட தீட்சிதர்கள் இன்று எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காததால் இப்பிரச்சனைக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவே கருதப்படுகிறது.


(மூலம் - வெப்துனியா)


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: